

சென்னையில் கழிவுநீரில் உற்பத்தியாகும் கியூலெக்ஸ் வகை கொசுக்கள் அதிகரித்துள்ளதால் கொசுக்கடியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் 30 சிறு கால்வாய்கள் உள்ளன. இவற்றில் ஓடும் கழிவுநீரில் பொருட்கள் மிதப்பதால் கழிவுநீர் தேக்கம் ஏற்படுகிறது. அதில் இருந்துதான், கடித்து தொந்தரவு செய்யும் கியூலெக்ஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாவதாக மாநகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே கண்டறிந்துவிட்டது.
சைதை துரைசாமி மேயராக இருந்தவரை, கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் கழிவுகள் சிறிதும் தேங்காமல் பார்த்துக் கொண்டார். கியுலெக்ஸ் கொசுக்களும் கட்டுக்குள் இருந்தன. கூவம், அடையாறு, பக்கிங்ஹாம்கால்வாய் ஆகியவை பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருந்தாலும், பராமரிக்க போதிய நிதியில்லை என அத்துறை கைவிரித்த நிலையில், மிதக்கும் கழிவுகளை அகற்றுதல், அவற்றில் உருவாகும் கொசுப் புழுக்களை அகற்றும் பணிகளை மாநகராட்சியே மேற்கொள்ள அவர் நடவடிக்கை எடுத்தார்.
உள்ளாட்சி பிரிதிநிதிகள் பதவிகாலம் முடிந்த பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தில் மழைநீர்வடிகால், நோய் கடத்தி கட்டுப்பாடு, இயந்திர பொறியியல் போன்ற துறைகள் அடங்கிய பல்துறை ஒருங்கிணைப்பு பாதிக்கப்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்துவிட்டது.
இதுபோன்ற கால்வாய்களில் மிதக்கும் கழிவுகளை அகற்ற நீர், நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரம், ரோபோ இயந்திரங்கள் போன்றவை பின்லாந்துபோன்ற நாடுகளில் இருந்து மாநகராட்சி வாங்கியது. மிதக்கும் வடிகட்டிகளும் 13 இடங்களில் நிறுவப்பட்டன.
மாநகராட்சி மெத்தனம்
கொசுப் புழுக்களை அழிக்க மருந்து தெளிப்பதற்காக படகுகளும் வாங்கப்பட்டன. இருப்பினும் மிதக்கும் கழிவுகளை முற்றாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மிதக்கும் வடிகட்டிகள் உள்ள இடங்களில் வடிகட்டப்படும் கழிவு பொருட்கள் காலத்தோடு அகற்றப்படாததால், கழிவுநீர் வழிந்தோடுவதில் பாதிப்பு ஏற்பட்டு, கொசுஉற்பத்தி அதிகமாகி, அவை
கடிப்பதால் கடும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கொசுக்கள் உற்பத்தியான பிறகு அழிப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்திடம் ஏற்கெனவே, 312 கையினால் புகை பரப்பும் இயந்திரங்கள், 23 சிறிய ரக புகைப்பரப்பும் இயந்திரங்கள், 39 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள், 7 நவீன பெரிய புகைபரப்பும் இயந்திரங்கள் கைவசம் உள்ளன.
புகை பரப்புதல், கொசுப்புழுக்களை அழித்தல் போன்ற எல்லா பணிகளையும் செய்வதாக மாநகராட்சி கூறும் நிலையில், கொசுக்கள் கட்டுப்படுத்தப்படாதது குறித்து மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும், மாற்று திட்டங்கள் குறித்து யோசிக்காமல், பழைய முறைகளையே பின்பற்றுவதாகவும், அதையும் முறையாக பின்பற்றுவதில்லை எனவும்
பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
கியூலெக்ஸ் கொசு இருப்பதாக மாநகராட்சியில் புகார் தெரிவித்தாலும், அவை உருவாகும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என சுகாதார ஆய்வாளர்கள் கைவிரித்துவிடுகின்றனர்.
மழை பெய்யவில்லை
வளர்ந்த கொசுக்களை அழிக்க மட்டும் கொசு புகை மருந்துகளை பரப்புகின்றனர். அதனால் கொசுக்கள் அழிவதுமில்லை. தற்போது மாநகரம் முழுவதும் கொசுத்தொல்லை அதிகரித்திருப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டு சென்னையில் குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. அதனால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் இருந்தமிதக்கும் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் கடலுக்கு அடித்துச் செல்லப்படவில்லை. இதன் காரணமாக கியூலெக்ஸ் வகை கொசுக்கள் அதிகரித்துள்ளன. அதைக் கட்டுப்படுத்த ஆறுகள் மற்றும் கால்வாய்களில் மிதக்கும் செடிகள்மற்றும் கழிவுகளை அகற்றும்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொசுத் தொல்லை குறைந்து வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.