

மதுரையில் இந்திய மருத்துவ ஆய்வகத்தின் (ICMR) கீழ் செயல்பட்டுவந்த ஆய்வு மையத்தைத் தொடர்ச்சியாக செயல்படவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மதுரையில் இந்திய மருத்துவ ஆய்வகத்தின் "ஏந்திகள் வழி" பரவும் நோய்களை (vector borne diseases) கட்டுப்படுத்த ஆய்வகம் செல்பட்டு வந்தது. கடந்த பல பத்தாண்டுகளாக செயல்பட்டு வந்த ஆய்வகம் தமிழத்தில் மிக அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திய பல்வேறு நோய்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றை கட்டுப்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறிப்பாக மூளைக்காய்ச்சல் (japanese encephalitis) நோயானது திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பெரிய அளவில் பரவியிருந்தது. யானைக்கால் நோய் (filariasis) கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பரவியிருந்தது.
மதுரையில் செயல்பட்டுவந்த ஐசிஎம்ஆர் ஆய்வகம் இந்த இரு கொள்ளை நோய்களையும் கட்டுப்படுத்த பெரிதும் உதவி செய்தது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, தமிழகத்திற்கு பெரும் தொண்டாற்றி வந்த ஆய்வகத்தை புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் மையத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறது.
மத்திய அரசு மேற்கொண்ட இந்த இணைப்புப் பணிகள் தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்டன. இந்த மையத்தின் முக்கியத்துவம் கருதியும், புதுச்சேரி மையத்துடன் இணைப்பை மேற்கொள்ளும் முடிவு மதுரை மையத்தை நீர்த்துபோகச் செய்யும் செயல் என்று தெரிவித்து இந்த முயற்சியை கைவிடும்படி கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடிதம் ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதினேன்.
இதற்கு பதில் எழுதிய ஐசிஎம்ஆர் இயக்குனர், நிர்வாகக் காரணங்களுக்காகவும்,சிக்கனம் கருதியும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் அனைத்து மையங்களின் செயல்திறன்களையும் மேம்படுத்தும் நோக்கத்துடனும் இணைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேற்சொன்ன கடிதத்திற்கு பதிலாக ஒரு கடிதத்தை இன்று(நேற்று) மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அளித்துள்ளேன். அந்த கடிதத்தில், ‘கடந்த நவம்பர் மாதம் உலகப் புகழ்பெற்ற லான்செட் மருத்துவ ஆய்விதழ், மக்களின் சுகாதாரத்தில் மானுடம் அடைந்த அனைத்து நல்லவிளைவுகளையும் காலநிலை மாற்றம் இல்லாமல் செய்துவிடும் என்று தெரிவித்தது.
அதுவும் குறிப்பாக "ஏந்திகள்வழி" பரவும் நோய்களை (vector borne diseases) அதிகரிக்கும் என்று ஆய்வுகளை மேற்கோள் காட்டி தெரிவித்திருந்தது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புதிதாக பரவும் நோய் கிருமிகள் தொற்றாக மாறி அதிகமான மக்கள் பாதிப்பிற்கு உள்ளவர்கள் என்றும் அதிகஎண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்றும் தெரிவித்திருந்தது.
அதிகரித்து வரக்கூடிய எபோலா, சார்ஸ், கொரோனா போன்ற கொள்ளை நோய்களே இதற்கு சாட்சியாக உள்ளன. மேலும், புதுச்சேரியில் செயல்படும் அமைப்புடன் இணைக்கப்பட்டால் மதுரை ஐசிஎம்ஆர் ஆய்வகம் நிர்வாக ரீதியாகவும் சிக்கல்களை எதிர்கொள்ளும்.
இந்த பின்னணியில்தான் மதுரையில் செயல்பட்டு வந்த ஐசிஎம்ஆர் (ICMR) போன்ற மையங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இப்போது செயல்பட்டு கொண்டிருக்கும் மையங்களை மேம்படுத்தி இன்னும் அதிகமான மையங்களை நிறுவவேண்டிய தேவையும் உள்ளது.
இந்த பின்னணியில் மதுரையில் செயல்பட்டு வந்த ஐசிஎம்ஆர் (ICMR) மையத்தை தொடர்ந்து செயல்பட அனுமதித்து, அந்த மையத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ’ என குறிப்பிட்டுள்ளேன், ’’ என்றார்.