

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சளி,இருமல்,காய்ச்சல் மற்றும் தும்மல் ஆகிய பாதிப்புகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி மருத்துவப் பரிசோதனை செய்ய இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் (கரோனா) மக்களுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பா நாடுகள், ஆசிய நாடுகளில் இதுவரை 4,500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவத்தொடங்கி விட்டது. இதுவரை 81 பேர் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கர்நாடகாவில் ஒருவர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனால், நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோயில்கள், பஸ்நிலையங்கள், ரயில்நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் ‘கோவிட்-19’ மருத்துவ பரிசோதனை மையங்களையும் சுகாதாரத்துறை அமைத்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட ‘கோவிட்-19’வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால், இந்த அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
அவர்கள் ரத்தமாதிரிகள் சேகரித்து ஆய்வு மையங்களுக்கு அனுப்பி வருகின்றனர். திருப்பதி, சபரிமலை போன்ற இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் பக்தர்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் பாதிப்புடன் கோயிலுக்கு வர வேண்டாம் என்று அக்கோயில் தேவஸ்தானங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
திருப்பதியைப் போல் தமிழகத்தில் மீனாட்சியம்மன் கோவில் முக்கியமான ஆன்மீக தலம். இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், வடமாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
ஆனால், தமிழகத்தில்‘கோவிட்-19’ வைரஸ் இதுவரை உறுதிசெய்யப்படாததால் மீனாட்சியம்மன் கோயிலில் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிவில் இன்று முதல்‘கோவிட்-19’ வைரஸ் அறிகுறி இருக்கும் நோயாளிகளைக் கண்டறியவும், அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உடனடியாக மருத்துமவனைகளுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் நடராஜன் கூறுகையில், ‘‘காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டநெரிசல் பகுதியில் செல்லாமல் இருக்கவும், அவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்யவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மீனாட்சியம்மன் கோயிலில் இந்த அறிகுறியுடன் வரும் பக்தர்கள் கண்டறியப்பட்டால் சாமிதரிசனம் செய்வதற்கு முககவசங்கள் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து ஆலோசனைகள், பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதற்காக யாரையும் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என சொல்லவில்லை. பாதுகாப்பாக வரவும், அதற்கான ஆலோசனைகளைப் பெறவுமே அறிவுறுத்தி உள்ளோம், ’’ என்றார்.
சுகாதாரத்துறை, ‘கோவிட்-19’வைரஸ் அச்சத்தால் பொதுமக்களுக்கு வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளநிலையில் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளது.