குரூப்-4 கலந்தாய்வு மார்ச் 20-ல் தொடக்கம்; குறித்த தேதியில் வராவிட்டால் மறு அனுமதி இல்லை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 கலந்தாய்வு மார்ச் 20-ல் தொடக்கம்; குறித்த தேதியில் வராவிட்டால் மறு அனுமதி இல்லை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Updated on
1 min read

குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு மார்ச் 20-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கிறது. கலந்தாய்வுக்கு வருபவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள், அழைப்புக் கடிதம் பதிவிறக்கம் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பு:

“ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-4 தேர்வு 2018-19 ஆம் ஆண்டு மற்றும் 2019-20 ஆம் ஆண்டு அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜூன் 14 அறிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் நவம்பர் 12-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

தேர்வு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை தேர்வாணையம் சாலை- பழைய பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ( இடையில் 22, 25, 29 ஆகிய தேதிகளில் இல்லை) நடைபெற உள்ளது.

மேற்படி தட்டச்சர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் அரசு தொழில்நுட்ப கல்வித் தகுதியான தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீடு விதி மற்றும் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் ((www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.

*விண்ணப்பதாரர்கள் தங்களது இணைய வழி விண்ணப்பத்தில் கோரிய கல்விச் சான்று மற்றும் அனைத்து இன்றியமையாத சான்றிதழ்களையும் நேரில் கொண்டு வர வேண்டும்.

* சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

*அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அனுப்பப்பட மாட்டாது.

* மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் அவரவர் தொழில் நுட்பக் கல்வித்தகுதி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை/ இட ஒதுக்கீடு விதிகள்/ விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் நிலவும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

* எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

* சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது”.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in