

மதுரை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்படும் ஹரிஜன சேவா சங்க பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள போதிய நிதி உதவி வழங்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
மதுரை கோமஸ்பாளையத்தை சேர்ந்த முத்துச்செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மகாத்மா காந்தி 1932-ல் தீண்டாமையை ஒழிக்க ஹரிஜன் சேவா சங்கத்தை உருவாக்கினார்.
இந்த சங்கம் மதுரை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலுரில் உண்டு உறைவிட பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகைள நிறைவேற்ற போதிய நிதி உதவி செய்யப்படுவதில்லை.
மதுரையில் செயல்படும் பள்ளிக்கு 2015-16, 2017 -18 கல்வி ஆண்டுக்கான நிதியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு 2016 முதல் 2019 வரையிலான கல்வி ஆண்டுக்கான நிதியும் வழங்கப்படவில்லை. எனவே மதுரை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் ஹரிஜன சேவா சங்கப்பள்ளிகளுக்கு போதிய நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.