

சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக பெண் கவுன்சிலரை ஆஜர்படுத்தக்கோரி வழக்கு தொடர்ந்த மகனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவருக்கு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேனி வெம்பக்கோட்டையைச் சேர்ந்த விமலீஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "அதிமுகவை சேர்ந்த என் தாயார் சாந்தி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் இரு முறை அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
மார்ச் 4-ல் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் 3 முதல் என் தாயாரை காணவில்லை. என் தாயார் மீட்கப்படும் வரை சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்கவும், தேர்தலில் என் தாயார் பங்கேற்பதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முன்தினம் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய தலைவர், துணைத் தலைவர் (திமுகவை சேர்ந்தவர்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் செயல்படுவதற்கு தடை விதித்தும், மனு தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், போடி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தாயார் சாந்தி நேரில் ஆஜராகி, தன்னை யாரும் கடத்தவில்லை. குரங்கணியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன்" என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, இதை சின்னமனூர் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும்.
சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும், மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.