

சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (15-ம் தேதி) வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிக்குமார் கூறியிருப்பதாவது:
திருவேங்கடம் வட்டம் குறிஞ்சாக்குளம் கிராமத்தில் காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக இரு வேறு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 14.3.1992 அன்று அம்பிகாபதி, சக்கரைப்பாண்டி, சுப்பையா, அன்பு ஆகிய 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு நடந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து 2001-ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட 4 பேருக்கும், நாளை (14-ம் தேதி) நினைவேந்தல் நிகழ்ச்சி குறிஞ்சாக்குளம் கிராமத்தில் நடத்த அனுமதி கோரி புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் ஏர்போர்ட் த.மூர்த்தி என்பவர், ஆட்சியரிடம் மனு அளித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும், சங்கரன்கோவில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஏர்போர்ட் மூர்த்தி தரப்பினரும், ஆர்ப்பாட்டம் நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினரும் குறிஞ்சாக்குளம் கிராமத்துக்கு வருவதாகவும், அவ்வாறு வந்தால், மற்றொரு தரப்பினர் பிரச்சினை செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சேலத்தைச் சேர்ந்த இமயவரம்பன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் பிரச்சினைக்குரிய இடத்தில் உள்ள பீடத்தில் காந்தாரி அம்மன் சிலையை வைத்தே தீருவேன் என்று சூளுரைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனால், சாதி மோதல் ஏற்பட்ட சட்டம், ஒழுங்கு பாதிப்பதைத் தடுக்கவும், இரு தரப்பினரிமையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, நல்ல தீர்வு கிடைக்கும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கடிதம் மூலம் சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சினை தொடர்பாக திருவேங்கடம் வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், “சிலை நிறுவ உள்ள இடம் புறம்போக்கு நிலம் என தெரியவந்துள்ளது. எனவே, அங்கு சட்டத்துக்கு புறம்பாக சிலை அமைக்க கூடாது.
இரு சமுதாயத்தினரும் எவ்வித பிரச்சினைகளிலும் ஈடுபடாமல் இருப்பது” என முடிவு செய்யப்பட்டது. சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டத்தில், ஒரு தரப்பினர் அமைதிப் பேச்சுவார்த்தை தீர்மானத்தில் தங்களுக்கு உடன்பாடு இலலை என்று கூறிச் சென்றனர்.
எனவே, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், ஜாதிரீதியான மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 144 (1) மற்றும் (2)-ன்படி, சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியூர் நபர்கள் குறிஞ்சாக்குளம் கிராமத்துக்குள் வரவும், எந்த வகையிலும் போராட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 13-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் 15-ம் தேதி (நாளை மறுநாள்) மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.