

அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான மானியத் தொகை 38 கோடியே 50 லட்சம் ரூபாயில் இருந்து 2020-21ஆம் ஆண்டில், 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
இன்று சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அதில் பள்ளிக் கல்வித்துறைக்கான அறிவிப்பு வருமாறு:
“ வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
இப்பள்ளிகளுக்குத் தேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
* வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
* 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும்.
* அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக, 1,890 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் மீதமுள்ள 4,282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 48 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்துத் தரப்படும்.
* அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான மானியத் தொகை 38 கோடியே 50 லட்சம் ரூபாயில் இருந்து 2020-21ஆம் ஆண்டில், 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.