

ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும், அப்புறம் பாஜகவுக்கு வருவதைப் பற்றி பேசுவோம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
விருதுநகர் அருகே உள்ள நாராயணபுரத்தில் பாரத பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் பாரத மாதா கோயில் நிறுவப்பட்டுள்ளது.
30 அடி உயரம் உள்ள பாரதமாதா சிலையை இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் பேசியதாவது:
"பராசக்தி, காளியம்மன், மாரியம்மன், முத்தாளம்மனை போல் பாரத மாதாவை மக்கள் வணங்க வேண்டும் என்பதுதான் என்னைப்போன்ற தேசபக்தர்களின் எதிர்பார்ப்பு.
எல்.முருகன் நியமனம்: பாஜகவின் சமூக நீதி
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அகில இந்திய தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித் என்பதால் பதவி வழங்கப்பட்டிருப்பதான சர்ச்சை தேவையற்றது. எல்.முருகன் எஸ்.சி, எஸ்.டி கமிஷன் துணைத் தலைவராக வரும்வரை தமிழகத்தில் பலருக்கும் ஏன் பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கும் கூட விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. அவர் துணைத் தலைவரான பிறகு அச்சமுதாய மக்களின் உரிமைகளுக்காக தமிழ்நாடு முழுவதும் முனைப்புக் காட்டினார்.
எல்.முருகன், சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மிகச்சிறந்த வழக்கறிஞர். அவரின் தலைமையில் 2020 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளோம். ஏற்கெனவே தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருகிறது. புதிய தலைமையின் கீழ் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். எனவே குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளை வாங்கவே எல்.முருகனை நியமித்திருப்பதாகக் கூறுவது ஏற்புடையது அல்ல.
எல்.முருகன் மட்டுமல்ல வேறு யாரை நியமித்திருந்தாலும் அவருக்கும் ஒரு சமுதாயம் இருந்திருக்கும்தானே. அதனால் இதை அரசியலாக்காமல் பாஜகவின் சமூக நீதியைப் பாராட்ட வேண்டும். சமூக நீதியைக் காப்பதும் அதேவேளையில் சமூக நீதியில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதுமே எங்களின் கோட்பாடு.
ஸ்டாலினுக்கு சவால்
ஸ்டாலின் காஞ்சி மடத்தைப் பார்த்து ஒரு பட்டியலினத்தவர் தலைவராக முடியுமா என்று எழுப்பிய கேள்வியை நாங்கள் திமுகவைப் பார்த்துக் கேட்கிறோம். அவர்கள் செய்யாததை நாங்கள் செய்திருக்கிறோம். சமூக நீதி குறித்துப் பேசும் திமுகவில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக்க முடியுமா? எனச் சவாலாக கேட்கிறேன். நியாயப்படி இந்த விஷயத்தில் எங்களை அவர்கள் பாராட்டத்தானே வேண்டும்.
சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நாங்கள் நடத்தும் சிஏஏ ஆதரவுக் கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் வருகின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது. ஸ்டாலின், இஸ்லாமிய மக்களை திசை திருப்பப் பார்க்கிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பில் இஸ்லாமியர்களை மட்டும் ஏன் கலந்துகொள்ளக் கூடாது என்கிறார்? உண்மையில் அவர் திமுகவினர் அனைவருக்குமே இதைச் சொல்லியிருக்க வேண்டாமா?
அரசியலுக்கு வரட்டும்...
ரஜினிகாந்தின் சில கருத்துகள் பாஜகவுக்கு ஏற்புடையதே. ஆட்சிப் பொறுப்பு ஒருவருக்கு, கட்சித் தலைமை ஒருவருக்கு என்பதை பாஜக நடைமுறையாகக் கொண்டுள்ளது. அரசியலில் கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்ற அவரின் கருத்தையும் ஏற்கிறோம். ஆனால், ஒரு தொலைக்காட்சிப் பேட்டியை வைத்துக்கொண்டு ரஜினி பாஜகவுக்கு நேரடியாக ஆதரவளிக்கிறார், மறைமுகமாக ஆதரவளிக்கிறார் என்றெல்லாம் தீர்மானிக்க முடியாது. ரஜினி போன்ற தேசபக்தி, தேசிய சிந்தனை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். முதலில், ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும், அப்புறம் பாஜகவுக்கு வருவதைப் பற்றி பேசுவோம்.
சீமான் பேசுவது சரியல்ல..
தமிழக முதல்வராக தமிழர்தான் வரவேண்டும் என்ற சீமானின் வாதம் சரியானது அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு எதிராக இந்த வாதத்தை திமுக பிரச்சாரமாகவே செய்தது. ஆனால், பலனில்லை. மக்கள் மனதில் யார் இடம் பிடிக்கிறார்களோ அவர்கள்தான் முதல்வராக முடியும்''.
இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.