

என்பிஆர் குறித்து முஸ்லிம்களிடம் நிலவும் அச்சத்தை மத்திய அரசு நீக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களுக்கு இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், சிறுபான்மை மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
சிஏஏ சட்டத்துக்கு எதிராக நாடு முழுதும் சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். என்பிஆர் கணக்கெடுப்பு பணியில் சர்ச்சைக்குரிய கேள்விகள் குறித்தும் சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் பதிலளித்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "இதுவரை அரசு என்பிஆர் குறித்து நோட்டிபிகேஷன் கொடுக்கவில்லை. என்பிஆர் குறித்து இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை. பதிலளித்த பின் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கும். அதுவரை என்பிஆர் கணக்கெடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 13) ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு குறித்த சில அச்சங்கள் போக்கப்படும் வரை அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக அரசும், என்பிஆர் கணக்கெடுப்பில் ஐயத்திற்கு இடமானவர்கள் என எவரும் அறிவிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!
தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் முஸ்லிம் சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையையும், நிம்மதியையும் விதைக்கும் என்றும் நம்புவோம். என்பிஆர் தயாரிப்பில் சர்ச்சைக்குரிய 3 கேள்விகளை மத்திய அரசு நீக்கி அச்சத்தை முழுமையாகப் போக்க வேண்டும்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.