

கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பதைத் தடுக்க தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை சொக்கிகுளம் உழவர்சந்தையில் ரூ.50 லட்சத்தில் ரசீதுடன் கூடிய மின்னணு எடைத் தராசு கடைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 1999-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் உழவர் சந்தைத் திட்டம் தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் அண்ணா நகர், சொக்கிகுளம், மேலூர், பழங்காநத்தம், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆனையூர் ஆகிய 7 இடங்களில் உழவர்சந்தைகள் செயல்படுகின்றன.
இதில் சொக்கிகுளம் உழவர் சந்தை 2000-மாவது ஆண்டு ஏப்ரல் 4-ல் திறக்கப்பட்டது. 20-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த உழவர்சந்தை தமிழகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த உழவர்சந்தையில் 156 கடைகள் உள்ளன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 482 விவசாயிகள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர் களைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நாளொன்றுக்கு 20 டன் காய்கறிகள் வரை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
மாட்டுப்பொங்கல், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகிய இரு நாட்களைத் தவிர ஆண்டு முழுவதும் இந்த உழவர்சந்தை செயல்படுவது இதன் தனிச்சிறப்பு. அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த உழவர்சந்தை பகல் 1 மணி வரை செயல்படுகிறது. விவசாயிகளுக்கு மொத்த காய்கறிச் சந்தைகளை விட 20 சதவீதம் கூடுதலாகவும், நுகர் வோருக்கு சில்லறை விலையை விட 15 சதவீதம் குறைவாகவும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. காய்கறிகள் வாங்க தினமும் 6,500 பேர் வருகின்றனர்.
இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டதால் மதுரை மாநகராட்சி நெகிழி இல்லாத உழவர்சந்தையாக அறி வித்தது. 2018-2019-ம் ஆண்டில் மட்டும் 5,850 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.18 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் ஆகும். இந்நிலையில் இந்த உழவர் சந்தையில் தமிழகத்திலேயே முதன் முறையாக ரசீதுடன் கூடிய மின்னணு எடைத் தராசு அறி முகப் படுத்தப்பட உள்ளது.
இது குறித்து உழவர்சந்தை நிர்வாக அலுவலர் தர் கூறிய தாவது:
தற்போது ஒவ்வொரு கடை களிலும் கையால் எழுதிய விலைப் பட்டியல்தான் வைத்துள் ளோம். மின்னணு எடைத் தராசு கள் இருந்தாலும் அவை எடை, விலையுடன் கூடிய ரசீது வரக்கூடியதாக இல்லை. அத னால், விலைப்பட்டியலில் குளறு படி இருப்பதாக புகார் எழும். நுகர் வோரின் சிரமத்தைப் போக்க உழவர்சந்தையில் ரசீதுடன் கூடிய மின்னணு எடைத் தராசு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத னுடன் டிஜிட்டல் விலைப் பட்டி யல் வைக்கவும் ஏற்பாடு செய் துள்ளோம்.
ரசீதுடன் கூடிய மின்னணு எடைத் தராசில், விலைப் பட்டியல் அன்றாடம் மாற்றம் செய்யப்படும். இந்த முறையால்நுகர்வோர், விவ சாயிகளிடையே சர்ச்சை ஏற்படாது.
இதற்காக சொக்கிகுளம் உழவர்சந்தைக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் அனைத்துக் கடைகளுக்கும் நிறுவப்படும். நுகர்வோரிடம் கனிவாகப் பேச, விவசாயிகளுக்கு வாரம் ஒரு முறை ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குகிறோம். என்று கூறினார்.