

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்வதற்காக நாகைஅக்கரைப்பேட்டை துறைமுகத்துக்கு வந்த மீன்வளத் துறை அதிகாரிகளைத் தடுக்க நிறுத்தியதோடு, தங்களின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வெள்ளப்பள்ளம் அருகே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன் பிடித்த கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும், அதை தட்டிக்கேட்ட வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கும் இடையே கடந்த 10-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 4 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளப்பள்ளம் மீனவர்கள் நாகை மாவட்டஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயரின் உத்தரவின்பேரில் மாவட்ட மீன்வளத் துறைஇணை இயக்குநர் அமல் சேவியர்தலைமையில் கோட்டாட்சியர் பழனிகுமார், வட்டாட்சியர் பிரான்சிஸ், டிஎஸ்பி முருகவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்துக்கு நேற்று சென்றனர்.
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்வதற்காக அவர்கள் துறைமுக வளாகத்துக்குள் நுழைந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த கீச்சாங்குப்பம் மீனவ கிராம பெண்கள்தங்கள் தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி போலீஸாரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, அவர்களை தடுத்தடிஎஸ்பி முருகவேல் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றினர். இதனால் மீனவ பெண்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றுகூறி பெண்களை அக்கரைப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார் அமைதிப்படுத்தினர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து, அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் மீனவ கிராம பஞ்சாயத்தார், மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. "அடுத்த வாரம் மீனவகிராம மக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதில்லை என்றும், மீறிப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
அதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம்" என்று மீனவ கிராம பஞ்சாயத்தார் தெரிவித்தனர். இதையடுத்து மீன்வளத் துறையினர், அதிகாரிகள் மற்றும் போலீஸார் அங்கிருந்து சென்றனர்.