Published : 13 Mar 2020 08:33 AM
Last Updated : 13 Mar 2020 08:33 AM

கண்காணிப்பு கேமராக்களால் சென்னையில் குற்றங்கள் குறைந்தன: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

வட சென்னையில் (போக்குவரத்து வடக்கு மாவட்டம்) புதிதாக நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண், இணை ஆணையர்கள் எழில் அரசன், ஜெயகவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை

கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி அளித்த ரூ.7 லட்சம் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் நிதியுதவி ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.12.5 லட்சம் செலவில் வட சென்னையில் (போக்குவரத்து வடக்கு காவல் மாவட்டம்) 66 கண்காணிப்பு கேமராக்கள் 20 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பூக்கடை உட்கோட்டத்தில் 6 முக்கிய சந்திப்புகளிலும், வண்ணாரப்பேட்டை போக்குவரத்து உட்கோட்டத்தில் 7 முக்கிய சந்திப்புகளிலும், மாதவரம் போக்குவரத்து உட்கோட்டத்தில் 7 முக்கியசந்திப்புகளிலும் இந்த கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. பாரிமுனையில் குறளகம் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை இந்த கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசும்போது, “இந்தியாவிலேயே மிகச் சிறந்த, வாழத் தகுந்த நகரமாக சென்னை மாநகரம் மாறியுள்ளது. இதற்கு கண்காணிப்பு கேமராக்களும் முக்கிய காரணம். சென்னை மாநகரம் முழுவதும் வணிக வளாகங்கள், அங்காடிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ச்சியாக பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால், குற்றங்கள் குறைந்துள்ளன. தற்போது மேலும் 66கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியை குற்றம் இல்லாத பகுதியாக மாற்ற கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவியாக இருக்கும். இவை பாதுகாப்பு உணர்வை அளிப்பதுடன், பாதுகாப்புக்கு மேலும் பலத்தை கூட்டும்.அனைவரும் வீடு, அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை தொடர்ந்து பாடுபடும்” என்றார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண், இணை ஆணையர்கள் எம்.வி.ஜெயகவுரி, எழில் அரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x