Published : 13 Mar 2020 08:26 AM
Last Updated : 13 Mar 2020 08:26 AM

குடியுரிமை சட்டம், மக்கள்தொகை பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது- முதல்வரிடம் அரசு தலைமை காஜி உள்ளிட்டோர் வலியுறுத்தல்

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை தலைவரும் தமிழக தலைமை காஜியுமான சலாவுதீன் முகம்மது அயூப், பொதுச் செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான், சட்ட ஆலோசகர் எம்.ஹெச்.பி.தாஜுதீன் உள்ளிட்டோர் முதல்வர் பழனிசாமியை நேற்று சந்தித்தனர். உடன் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் நா.பாலகங்கா.

சென்னை

தமிழக அரசு தலைமை காஜி உள்ளிட்டோர் முதல்வர் பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்து குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல் படுத்தக் கூடாது என்று கோரி மனு அளித்தனர்.

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் தலைவரும், தமிழக அரசு தலைமை காஜியுமான சலாவுதீன் முஹமத் அயூப், பொதுச் செயலர் எம்.ஜி.தாவூத் மியாகான், பொருளாளர் யு.முஹமது சஹாபுதீன், இணைச் செயலர்கள் ஏ.சாகுல் ஹமீது, முஹமது இஸ்மாயில், சட்ட ஆலோசகர் எம்.எச்.பி.தாஜுதீன், துணைத் தலைவர் ஜெ.எம்.பி.ஜமால் முஹமது அப்துல்லா ஆகியோர் தமிழக முதல்வரை, சென்னையில் நேற்று மாலை சந்தித்தனர்.

பின்னர் தாவூத் மியாகான் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத்துக்குஎதிரானது. தேசிய மக்கள் தொகைபதிவேடு, தேசிய குடிமக்கள்பதிவேடு ஆகியவை ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அனுமதித்தால், தேசிய குடிமக்கள் பதிவேடு வந்துவிடும் என்பது குறித்து முதல்வரிடம் விளக்கினோம்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக மத்திய அரசிடம் சில விளக்கங்களை கேட்டிருக்கிறோம். விளக்கம் கிடைக்கும்வரை அதை அமல்படுத்த மாட்டோம். இன்னும் 2 மாதங்களுக்கு தேசிய மக்கள்தொகை பதிவேடு வரக்கூடிய சூழ்நிலை இல்லை என்று முதல்வர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார். அது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது. மேலும், மத்திய அரசின் விளக்கத்தைப் பொறுத்தே எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். ஏதோ கண்துடைப்புக்காக சில மாநிலங்களில் அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், அவ்வாறு செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும், இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட சட்டத்தைதான் தமிழகத்தில் அமல்படுத்துவோம் என்றும் முதல்வர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் தன்னெழுச்சியாக வந்தது. அதை தொடருவதா, கைவிடுவதா என்பது குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

போராட்டங்கள் தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தையில் எதுவும் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x