

பெங்களூருவில் கோவிட் 19 வைரஸ் பீதி அதிகரித்துள்ள நிலையில்,தற்போது 20க்கும் மேற்பட்டோருக்கு காலரா நோய் தாக்கியுள்ளது மருத்துவபரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோவிட் 19 வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
பெங்களூருவில் 4 பேருக்கு கோவிட் 19 வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், இதன் எண்ணிக்கை தற்போது 5-ஆக உயர்ந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, பெங்களூருவில் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெங்களூருவில் 27 போ் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனா். காலரா மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கர்நாடக சுகாதாரத்துறை பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள சாலையோர உணவகங்களை மூட உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு சுகாதார ஆணையர் ரவிகுமார் கூறியதாவது:
கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களை பரிசோதித்ததில் 27 பேருக்கு காலரா நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
உரிய சுகாதாரம் இல்லாமலும், அனுமதி இல்லாமலும் நடத்தப்படும் சாலையோர உணவகங்களை மூடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு குடிநீர் வாரியமும் நீரை தூய்மையான முறையில் விநியோகிக்க உத்தரவிட்டுள்ளது என ரவிக்குமார் கூறினார்.
பெங்களூருவில் ஏற்கெனவே கோவிட் 19 வைரஸ் பீதி நிலவும் நிலையில், தற்போது காலரா பாதிப்பு தொடர்பான செய்தியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.