

ரஜினியின் அரசியல் பார்வையை விமர்சித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், "ரஜினியும் தூங்குவதில்லை; மற்றவர்களையும் தூங்கவிடுவதில்லை" என்றார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கண்ணோட்டம் குறித்து இன்று (மார்ச் 12) சென்னையில் பேசினார். அப்போது அவர், தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கு தான் 3 முக்கிய திட்டங்கள் வைத்துள்ளதாகக் கூறினார். கட்சியில் குறைவான பதவிகள், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு வாய்ப்பு, கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு ஆகிய 3 திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் செய்தியாளர்களை சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
முத்தரசன் பேசுகையில், "ரஜினி கட்சி ஆரம்பிக்ப் போகிறேன் என்றோ கட்சி கொள்கை எதுவென்றோ இன்று அறிவிக்கவில்லை. ரஜினி தான் ஆரம்பிக்க போகும் கட்சிக்கு தன் பக்கம் நல்ல நபர்கள் இல்லை என்று கருதி பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறுகிறார். இது கட்சி தாவலை தூண்டுகிற கருத்து.
கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்ற கருத்து கூறும் ரஜினி கட்சி இதையே தொடங்கிய பிறகு கூறியிருந்தால் நன்றாக இருக்கும்.
ரஜினியும் தூங்குவதில்லை; மற்றவர்களையும் தூங்கவிடுவதில்லை. இதுதான் பிரச்சினை. தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்ற ரஜினியின் கருத்து தவறானது" என்றார்.
கலகத்தை உருவாக்க நினைக்கிறது..
கோவையில் சிஆர்பிஎஃப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, "கோவை மட்டுமல்லாது நாடு முழுவதும் பாஜக கலகத்தை உருவாக்கி மதக் கலவரங்களை திட்மிட்டு ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது.
பாஜகவில் தலித்துகளுக்கு பொறுப்பு வழங்குவது அவர்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே. தலித்துகளுக்கு வஞ்சக வலை விரிக்கப்படுகிறது. அதில் தலித் மக்கள் விழமாட்டார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஏதோ ஒரு ஆபத்து உள்ளதாக அதிமுகவிற்கு தெரிந்திருந்தும் பாஜகவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்று எந்த ஆபத்தும் இல்லை என்று கூறிவருகிறது" என்றார்.