

அரசியலுக்கு வருவதில் ரஜினிக்குத் தெளிவு இல்லை என, திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தன் அரசியல் கண்ணோட்டம் குறித்தும் இன்று (மார்ச் 12) சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது, தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கு தான் 3 முக்கிய திட்டங்கள் வைத்துள்ளதாகக் கூறினார். கட்சியில் குறைவான பதவிகள், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு வாய்ப்பு, கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு ஆகிய 3 திட்டங்களை வைத்திருப்பதாக ரஜினி கூறினார். தான் கட்சித் தலைவராக இருப்பேன் எனவும், முதல்வராக இருக்க மாட்டேன் எனவும் ரஜினி கூறினார். மேலும், மக்களிடம் புரட்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினி பேச்சு தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், "அரசியல் என்பது கட்சி அமைப்பை உருவாக்குவதல்ல. கொள்கையை உருவாக்கி அதற்கு தலைமை தாங்க வேண்டும். இப்போது யாரும் கொள்கைகளுக்காக அரசியலுக்கு வராமல், முதல்வர் பதவியைக் குறிவைத்தே வருகின்றனர்.
திமுக இளைஞர்களால் தான் ஆரம்பிக்கப்பட்டது. இளைஞர்கள் ஏற்கெனவே அரசியலில் இருக்கின்றனர். எல்லா கட்சிகளிலும் இளைஞர் அணி இருக்கிறது. திமுகவில் வலுவான இளைஞர் அணி இருக்கிறது. இளைஞர்கள் அரசியலில் இல்லை என ரஜினி எதனை மனதில் வைத்து சொல்கிறார் என தெரியவில்லை.
தேர்தலுக்குப் பின்னர் கட்சிப் பதவிகள் இருக்காது என சொல்வது எனக்குப் புதிதாக இருக்கிறது. அரசியல் தொடர்பான அவரது பார்வையில் தவறு இருக்கிறது. அரசியலுக்கு வருவதில் ரஜினிக்குத் தெளிவு இல்லை. பாஜகவை ஆதரித்தும் இருக்கிறார், கண்டிக்கவும் செய்திருக்கிறார். இந்த குழப்பங்கள் இருக்கும் வரை ரஜினி கட்சி தொடங்குவார் என்று எனக்குத் தோன்றவில்லை" என தெரிவித்தார்.