

என்னை முதல்வராக நினைத்துப் பார்க்கவே முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று (மார்ச் 12) ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமைதான் நம் கட்சியில் இருக்கும். கட்சிக்கு என ஒரு குழுவை நியமித்து அவர்கள் சொல்வதை ஆட்சியில் இருப்பவர்கள் செயல்படுத்த வேண்டும். ஆட்சிப் பதவி என்பது சிஇஓ பதவி போன்றது.
ரஜினி ஆட்சிக்குத் தலைவரா? அல்லது கட்சித் தலைவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் பதவி குறித்து நான் எப்போதும் நினைத்ததே கிடையாது. முதல்வராக என்னை நினைத்துப் பார்க்கவே முடியாது. சட்டப்பேரவையில் உட்கார்வது, பேசுவது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை. என் ரத்தத்தில் அது வரவே இல்லை.
1996-ம் ஆண்டிலேயே என்னைக் கேட்டனர். மூப்பனார், சோ, சிதம்பரம் என எல்லோரும் கேட்டனர். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருப்பதற்கான வாய்ப்பு இது, வாருங்கள் என்றனர். நான் ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் அவ்வளவுதான்.
நான் கட்சித் தலைவராக இருப்பேன். முதல்வர் பதவியில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையா அமர வைக்கப் போகிறோம்? வேட்பாளர்களாக தேர்தலில் நிற்கப் போகிறார்கள். அப்போது ஒவ்வொருவரின் தகுதி என்னவென்று தெரிந்துவிடும். மக்களுக்குத் தெரியாதா? அவர்களுள் நல்லவர், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர், மக்களிடத்தில் அன்புகொண்டவர், தன்மானம் உள்ளவரைத் தேர்ந்தெடுத்து அவரை முதல்வர் பதவியில் அமர வைப்போம்.
எதிர்க்கட்சியாக வந்தால்கூட குறைகளை முதலில் சுட்டிக்காட்ட வேண்டும். முதல்வரின் அன்றாடப் பணிகளில் கட்சித் தலைமை தலையிடாது. கட்சி ஆட்கள் யாரும் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது. மற்ற கட்சித் தலைவர்களின் இறப்புகள், நினைவுக் கூட்டங்கள், பிறந்த நாள் விழாக்களுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் வர வேண்டும் என்ற அவசியமில்லை. அதனைக் கட்சி பார்த்துக்கொள்ளும்".
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.