

பழமையான வாகனங்களைப் பாதுகாப்பதற்காக, ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் இல்லை என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ, தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுத்துபூர்வமாக அளித்த கடிதத்தில் கேள்வி எழுப்பியதாவது:
"புதிய போக்குவரத்துக் கொள்கை வரையும் திட்டம் அரசின் ஆய்வில் இருக்கின்றதா? எண்ணெய்க்கு மாற்றாக, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, நீர்ம எரிவாயு மற்றும் உயிரி எரிபொருள்கள் பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றதா? மேற்கண்ட எரிபொருள்களை நிரப்புவதற்கு, நாடு முழுமையும் புதிய விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் என்ன?
பழமையான வாகனங்களைப் பாதுகாக்க ஊக்கத்தொகை வழங்கப்படுமா? ஐம்பது ஆண்டுகள் பழமையான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த வாகனங்களைப் பாதுகாப்பதற்காக, அரசு விதிமுறைகள் வகுத்து இருக்கின்றதா? இல்லை என்றால், அத்தகைய விதிமுறைகள் வகுக்கின்ற திட்டம் உள்ளதா? எப்போது? வாகனங்களைப் பாதுகாக்க, அரசு ஏதேனும் ஊக்கத்தொகை வழங்குமா?"
இவ்வாறு வைகோ கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த விளக்கம்:
"மோட்டார் வாகனங்களுக்கான திருத்தச் சட்டம் 2019-ன்படி, நாடாளுமன்றத்தில் ஒப்புதலைப் பெற்று, 2019 ஆகஸ்ட் 9 ஆம் தேதி அரசு செய்தி இதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. மாநில அரசுகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் கருத்துகளைப் பெற்று, புதிய கொள்கையை வகுத்திட, இச்சட்டம் வகை செய்கின்றது.
எண்ணெய்க்கு மாற்றாக, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, நீர்ம எரிவாயு மற்றும் உயிரி எரிபொருள்கள் பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றது. கேசோலின், அடர் எண்ணெய், இரட்டை எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான உமிழ்வுத் தரக் கட்டுப்பாடுகளை, அமைச்சகம் அறிவித்து இருக்கின்றது.
1989 ஆம் ஆண்டு மோட்டார் வாகனங்களுக்கான திருத்தச் சட்டத்தின்படி, அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு, நீர்ம எரிவாயுவால் இயக்கப்படும் வாகனங்களுக்கு 115 (ஆ), எத்தனால் 115 (உ), உயிரி அடர் எண்ணெய் 115 (ஊ) மற்றும் மெத்தனால் 115 (ஏ) ஆகிய புதிய பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சகம் வகுத்துள்ள உமிழ்வுத்தரக் கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையில், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு, உயிரி எரிவாயு விற்பனை நிலையங்களைத் திறக்க வேண்டியது, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் பொறுப்பு ஆகும்.
பழமையான வாகனங்கள் வரைமுறை ஆணை 2019 என்ற ஆணையை போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்துள்ளது. பழமையான வாகனங்களைப் பாதுகாப்பதற்காக, ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் இல்லை"
இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்தார்.