

எந்த பின்னணியும் இல்லாமல், தகுதியும் திறமையும் இருந்தால் பாஜகவில் தலைமை பொறுப்புக்கு வரலாம் என, தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டது குறித்து அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்.1-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பாஜக தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக நியமித்து நேற்று (மார்ச் 11) பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டார். எல்.முருகன் அடுத்து வரும் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.
இதுதொடர்பாக நேற்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"எந்த மக்களுக்கு எதிராக பாஜக இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குறை கூறிக்கொண்டிருந்தார்களோ, இன்று அதற்கு மாற்றாக பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவரை தலைவராக நியமிப்பதன் மூலமாக சமூகத்தில் எப்படிப்பட்ட நபரும் அவர் கட்சிக்கு உழைப்பவராக திறமைசாலியாக இருந்தால் எந்த பின்னணியும் இருக்க வேண்டிய அவசியமில்லை, அவருக்கு பொறுப்பை தருவதற்கு பாஜக தயாராக இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது" என தெரிவித்தார்.
அதேபோன்று, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், "பொருத்தமான, சரியான தலைவரைத்தான் மத்திய தலைமை தேர்வு செய்திருக்கிறது. பாஜகவினர் அனைவரும் அவருடன் இணைந்து செயல்பட வேண்டும். பாஜகவை பொறுத்தவரை நாங்கள் சாதியை பார்த்து கட்சியை நடத்துவதில்லை. தகுதியும் திறமையும் இருக்குமானால், அவர் எந்த பிரிவை சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு உரிய பதவி வழங்க முடியும் என்பதை பாஜக மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் வேறு கட்சியில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது" என தெரிவித்தார்.