

'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் இ.கருணாநிதி, “தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் எப்போது விரிவுபடுத்தப்படும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், "தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு குடும்ப அட்டை மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கணினிமயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாங்களே பெயர் திருத்தம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அமல்...
'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.