Published : 12 Mar 2020 08:53 AM
Last Updated : 12 Mar 2020 08:53 AM

சட்டத்தால் மட்டுமே தடுத்துவிட முடியாது: பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதம்:

தா.மோ.அன்பரசன்: தமிழகம்முழுவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது பிளாஸ்டிக்தான். தமிழகத்தில் 2019-ம்ஆண்டு ஜனவரி 1-ம் தேதிமுதல் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2 மாதங்கள் மட்டுமே தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி தூக்கி எறிகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே பிளாஸ்டிக் ஒழிப்பில் அரசு தீவிரம் காட்டி, தனியாகஒரு கொள்கை வகுக்க வேண்டும்.

அமைச்சர் கே.சி.கருப்பணன்: 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது முதல்இன்றுவரை, உள்ளாட்சித் துறையுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

தா.மோ.அன்பரசன்: சென்னை புறநகர் பகுதிகளில் குப்பை கொட்டஇடம் இல்லை. குப்பை எடுக்கவும் ஆள், வாகன வசதி இல்லை. தொழில் நிறுவனங்களின் குப்பைகள் ஏரி, குளங்கள் பகுதியில் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசே தடை செய்துள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக தேவை. பல ஆண்டுகளாக அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். உடனடியாக அதை நிறுத்துவது எளிதானது அல்ல. எனவே மக்களும், வியாபாரிகளும் ஒத்துழைத்தால்தான் பிளாஸ்டிக்கை முழுமையாகத் தடை செய்ய முடியும். இருப்பினும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அவற்றை வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்: ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தூக்கி எறிவதால், அதை உண்ணும் விலங்குகள் உயிரிழக்கின்றன. ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிய தடைவிதிக்கப்படும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு மீதான நடவடிக்கை என்ன?

முதல்வர் பழனிசாமி: ஊட்டி மட்டுமல்ல, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களிலும் தடை செய்ய வேண்டும்என்றுதான் அரசு மாநிலம் முழுவதும் தடை செய்துள்ளது. அரசின் சட்டத்தால் மட்டுமே தடுத்துவிட முடியாது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் வேண்டும். இருப்பினும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிளாஸ்டிக் தடை சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x