Published : 12 Mar 2020 08:47 AM
Last Updated : 12 Mar 2020 08:47 AM

தமிழகத்தில் இனிமேல் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவர முடியாது: சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி

தமிழகத்தில் புதிதாக எந்த ஒருஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தவோ, கொண்டுவரவோ இனி இயலாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதம்:

ரகுபதி (திமுக): காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக 700 கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு அந்த கிணறுகள் செயல்படுத்தப்பட்டால் அப்பகுதி எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. இதற்கு சுற்றுச்சூழல் துறை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

முதல்வர் பழனிசாமி: தமிழகத்தில் இனி புதிதாக ஹைட்ரோ கார்பன்திட்டம் எதுவும் நடைபெற வாய்ப்பே இல்லை. முழுமையாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தபோதே, எந்த ஒரு திட்டத்தையும் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் அனுமதிக்கவோ, ரத்து செய்யவோ முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுக்கே உள்ளது என்று மத்திய அமைச்சர் வழங்கிய கடிதத்தை பேரவையில் படித்துக் காட்டினேன்.

ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு எவ்வாறு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை செயல்படுத்த முடியும் என்று மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இருந்து வேளாண் மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் திமுகவுக்கு பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.

மக்களுக்கு நன்மை பயக்கும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் டெல்டா பகுதியில் அரசியல் செய்ய முடியாது என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. இனி புதிதாக எந்த ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் தமிழகத்தில் அமல்படுத்தவோ, கொண்டுவரவோ இயலாது என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

ரகுபதி: திமுகவைப் பொறுத்தவரை வேளாண் மண்டலச் சட்டத்தை வரவேற்றுள்ளோம். குறைகளை களைய தேர்வுக் குழுவுக்குஅனுப்ப வேண்டும் என்றுதான் கூறினோம்.

முதல்வர் பழனிசாமி: குறை இருந்தால் அனுப்பலாம். குறையே இல்லையே. தெளிவாகத்தான் சட்டம் இயற்றியுள்ளோம். நீங்கள் அச்சப்பட வேண்டியது இல்லை.

ரகுபதி: குறையே இல்லாவிட்டால், பிரிவு 4-ஐ ஏன் வைத்துள்ளீர்கள். ஏற்கெனவே உள்ள திட்டங்கள் தொடரும் என்பது குறையா, இல்லையா?

முதல்வர் பழனிசாமி: அதிமுக ஆட்சியில் இந்த சட்டம் கொண்டுவரக் கூடாது என்ற உள்நோக்கத்தில் நீங்கள் செயல்படும்போது நாங்கள் என்ன செய்ய முடியும். வேண்டுமென்றே திட்டமிட்டு டெல்டா பாசனவிவசாயிகள் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த நீங்கள் இதைக் குறிப்பிடுகிறீர்கள். சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை எதிர்க்கவில்லை. புதிய திட்டத்துக்கு அனுமதியில்லை என்பதை வரவேற்கிறாம். ஆனால், தற்போது நடைபெற்று வரும் திட்டங்களை ரத்து செய்ய முடியாதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: விவசாயிகளைக் காக்க வேண்டும் என்பதுதான் அரசின் முதல் கடமை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தபின் யாரும் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கொண்டுவர முடியாது. அனுமதி கொடுக்கவும் முடியாது என்பதை சட்டத்தின் மூலம் தெளிவுபடுத்தி விட்டோம்.

ஏற்கெனவே இருப்பதை தடைசெய்தால், உடனடியாக நீதிமன்றம் செல்வார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் முதலீடு செய்த செலவினங்களை மாநில அரசுதான் ஏற்க வேண்டும். இப்பிரச்சினைகளில் எல்லாம் உட்படக் கூடாது என்பதற்காகத்தான், இந்த சட்ட முன்வடிவை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x