Published : 12 Mar 2020 07:47 AM
Last Updated : 12 Mar 2020 07:47 AM

போலி கால்சென்டர் நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி; பென்ஸ் சரவணன், வி.சி.க. பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது: சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நடவடிக்கை

போலி கால்சென்டர் நடத்தி கோடிக் கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக பென்ஸ் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் பொது மக்களை போனில் தொடர்பு கொண்டு வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியும், வாடிக்கையாளர்களின் வங்கி ஆவணங்களைப் பெற்றும் அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் பெற்றும் கும்பல் ஒன்று நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார்கள் அளித்தனர்.

அதன்படி, மத்திய குற்றப் பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி நேரடி மேற்பார்வையில் துணை ஆணையர் நாகஜோதி, உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் அண்ணா சாலையில் உள்ள பென்ஸ் கிளப்பின் ஒரு பகுதியில் போலி கால்சென்டர் இயங்கி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி, அங்கு விரைந்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, பென்ஸ் கிளப்பின் ஒரு பகுதியில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தி பொதுமக்களை போனில் தொடர்பு கொண்டு வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களின் வங்கி விவரங்களைப் பெற்று லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து போலி கால் சென்டர் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக பென்ஸ் வெக்கேஷன் கிளப் நிர்வாக இயக்குநர் பென்ஸ் சரவணன், அவரது கூட்டாளிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி துணைச் செயலாளர் பள்ளிகரணையைச் சேர்ந்த செல்வகுமார், ராயப்பேட்டை மிதுன் (40), வேளச்சேரி குமரன் (44) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “போலி கால்சென்டர் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ். ஐபிஎஸ்களிடமும்..

சாதாரண மக்கள் மட்டும் அல்லாமல் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கூட இவர்களிடம் பணத்தை இழந்தனர். காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கூட பணத்தை இழந்ததாக தகவல் கிடைத்தது.

இதுவரை 1,000-க்கும் மேற்பட்டவர்களிடம் கோடிக் கணக்கில் பண மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும். அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x