

செங்கல்பட்டு புறவழி சாலை பகுதியை சுற்றி 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்களின் வசதிக்காக சென்னை செல்லும் தென்மாவட்ட அரசுப் பேருந்துகள் செங்கல்பட்டு புறவழிச் சாலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்துத் துறை செங்கல்பட்டு புறவழிச் சாலையில் இருபுறமும் அரசு பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிவிட உத்தரவிட்டது. அதன்படி சில காலமாக பேருந்துகள் நின்றுசென்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டு புறவழிச் சாலையில் நின்று செல்வதில்லை. இதனால் மக்கள் செங்கல்பட்டில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள சுங்கச்சாவடி சென்று அங்கிருந்து வெளியூர் சென்று வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு கால விரயமும் வீண் அலைச்சலும் கூடுதல் பயணச் செலவும் ஏற்படுகிறது. அரசுப் பேருந்துகள் இங்கே நின்று சென்றால் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும். இதை விரும்பாத ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் அரசுப் பேருந்துகள் இங்கே நிற்காமல் இருக்க மறைமுக ஏற்பாடுகள் ஏதாவது செய்திருக்கலாம் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து செங்கல்பட்டுைச் சேர்ந்த சமூக ஆர்வ|லர் பாண்டியன் கூறியது:
செங்கல்பட்டு புறவழிச் சாலையில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என முதலமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேருந்துகள் நின்று சென்றன. அரசு பேருந்துகளைப் போல தனியார் ஆம்னி பேருந்துகளும் புறவழிச் சாலையில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அரசு பேருந்து நின்று செல்வதால் இவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால், அரசு பேருந்துகளை நிறுத்துவதை தடுத்துவிட்டனர்.
எனவே, புறவழிச்சாலையில் நேரக்காப்பாளரை நியமித்து அரசுப் பேருந்துகள் நிற்பதை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்தை சீர்செய்ய போதிய காவலர்களை நியமிக்க வேண்டும். பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.