Published : 11 Mar 2020 07:17 PM
Last Updated : 11 Mar 2020 07:17 PM

நாளை செய்தியாளர் சந்திப்பு: மாநாடு, கட்சி அறிவிப்பு வெளியிடுகிறாரா ரஜினி?

ரஜினி அரசியலின் அடுத்த பகுதியாக நாளை செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ரஜினி. முதன்முறை முழுமையான செய்தியாளர் சந்திப்பாக அது இருக்கும் எனத் தெரிகிறது. அதில் கட்சி அறிவிக்கும் தேதி, மாநாடு உள்ளிட்டவை இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்குப் பின் 2017-ம் ஆண்டு அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும் அதை நான் நிரப்புவேன் என்றும் ரஜினி கூறினார். நான் விரைவில்அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளேன். கட்சி ஆரம்பித்து நேரடியாக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் குதிப்பேன். யாருடனும் கூட்டணி கிடையாது. தனித்துப்போட்டி என்று ரஜினி பேட்டி அளித்தார்.

பின்னர் ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பித்தார். அதற்கு மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ரஜினி மக்கள் மன்றம் வேகமாக இயங்க, மாவட்ட ரீதியாக உறுப்பினர் சேர்ப்பு, நிர்வாகிகள் நியமனம் நடந்தது. இந்நிலையில் ரஜினியின் சில பேட்டிகள், தூத்துக்குடி விசிட், ஐபிஎல் போராட்டம் குறித்த பேட்டி, எழுவர் விடுதலை குறித்த பேட்டி, சிஏஏ குறித்த பேட்டி, பெரியார், துக்ளக் ஆண்டு விழாவில் முரசொலி குறித்த பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ரஜினியின் ஆன்மிக அரசியல் பாஜக ஆதரவு அரசியல் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. எனக்கு காவிச் சாயம் பூசாதீர்கள் என ரஜினி கூறினார். இந்நிலையில் சிஏஏ, என்பிஆர் குறித்தும் டெல்லி அரசியல் குறித்தும் ரஜினி பேட்டி அளித்தார். இஸ்லாமியத் தலைவர்களுடன் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியது அவர் மாற்று அரசியலைக் கொண்டு செல்கிறார் என்பதாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து ரஜினியின் நிலைப்பாட்டில் மாற்றம், அவர் ஒருவரைக் கை காட்டுவார் என்ற கருத்து கடந்த பத்து நாட்களாக வலுவாக எழுந்த நிலையில், ரஜினி அரசியலைக் கை கழுவுகிறார் என்கிற கருத்தும் சிலரால் பரப்பப்பட்டது.

இதுகுறித்து தனது நிலைப்பாட்டைச் சொல்லும் விதமாக நாளை காலை 10.30 மணிக்கு அவர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பில், நான்தான் கட்டாயம் அரசியலுக்கு வருவேன். அவ்வாறு வரும்போது என் தலைமைதான் இருக்கும். யாரையும் கை காட்ட மாட்டேன். நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று ரஜினி அறிவிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர கட்சி தொடங்குவதற்கான தேதி குறித்தும் பேசலாம். அது அநேகமாக ஏப்ரல் மாதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னொரு தரப்பில் நாளை கட்சி அறிவிக்கிறார், ஒருவேளை கொடியையும் அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.

மற்றொரு புறம் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி, மூன்று மாநாடுகளை தேர்தலுக்குள் நடத்த உள்ளார் என்றும், அதன் முதல் மாநாடு செப்டம்பரில் நடத்த உள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பும் வெளிவரும் என்ற தகவலும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x