திருவிழா வெடி தயாரிக்கும்போது விபத்து: தாய், மகள் பரிதாப பலி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவிழா வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்ததில் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவில் குடியிருந்தவர் கோபி (50). இவரது மனைவி பாண்டியம்மாள் (45). இவர்களுக்கு நிவேதா (18) என்கிற மகள் உண்டு. இவர் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் வெடி தயாரித்து விற்பனை செய்து வந்தார். சமீபத்தில் கோபி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
அவர் மறைந்த பின்னர் மனைவி பாண்டியம்மாள் திருவிழா வெடி தயாரிக்கும் பணியை குடும்பச் சூழல் காரணமாக செய்து வந்தார். அவருக்கு உதவியாக மகள் நிவேதா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் வெடி தயாரித்துக் கொண்டிருக்கும்போது திடீரென வெடி வெடித்தது. அடுத்தடுத்து வெடிகள் வெடித்ததால் வீட்டின் மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே பாண்டியம்மாள் உயிரிழந்தார். வெடி விபத்து ஏற்பட்டவுடன் அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
அப்பொழுது அங்கு வந்த போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் இடிபாடுகளை அகற்றி படுகாயமடைந்து பலத்த தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிய நிவேதாவை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நிவேதா தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கொண்டு செல்லப்படும்போது, வழியிலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவிழாவுக்கு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் தாய், மகள் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடி தயாரிக்க அனுமதி பெற்றுள்ளார்களா, வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீஸார், தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
