Last Updated : 11 Mar, 2020 03:33 PM

 

Published : 11 Mar 2020 03:33 PM
Last Updated : 11 Mar 2020 03:33 PM

வீட்டிலிருந்துதான் தொண்டினை தொடங்க வேண்டும், ஜென்டில்மேன்! - நாராயணசாமிக்கு கிரண்பேடி அறிவுரை

முதல்வர் நாராயணசாமி - கிரண்பேடி: கோப்புப்படம்

புதுச்சேரி

பெண் எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் இருந்தும் அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் இல்லை என, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசை விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் இன்று (மார்ச் 11) வெளியிட்டது:

"புதுச்சேரி பெண்கள், வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலை பற்றி நன்கு அறிந்து தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் அடிப்படை ஜனநாயகமான உள்ளாட்சியை மீண்டும் நிலைநிறுத்துவதில் பெண்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அது ஒரு தீர்வாக இருக்கும். தங்கள் சொந்த உள்ளூர் பிரச்சினைகளை அவர்களே சரி செய்ய முடியும். சட்டம் ஏற்கெனவே அவர்களுக்கு சிறப்பிடம் தருகிறது. உள்ளாட்சியில் மகளிருக்கான ஒதுக்கீடு இடங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். வாக்குகள் வழியாக அப்பதவிகளை பிடிக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

புதுச்சேரி அமைச்சரவையில் பெண்களே இல்லை. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்எல்ஏக்கள் இருக்கும்போது ஏன் இங்கிருந்து மகளிருக்கு அதிகாரம் தருவதை தொடங்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மகளிர் தினவிழாவில் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, மத்திய அரசு பெரும்பான்மையுடன் உள்ளதால் 33 சதவீத இடஒதுக்கீடு தரும் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அதனை தன் வாட்ஸ் அப் பதிவில் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ள கிரண்பேடி, "மூன்றில் ஒருபங்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் கோரும் முன்பு புதுச்சேரி அமைச்சரவையில் தரலாமே! தொண்டினை வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும், ஜென்டில்மேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x