Published : 11 Mar 2020 01:14 PM
Last Updated : 11 Mar 2020 01:14 PM

என்பிஆர்; அமைச்சர் உதயகுமார் பேரவையில் தவறான தகவல்களைக் கூறுகிறார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: கோப்புப்படம்

சென்னை

என்பிஆர் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் தவறான தகவல்களைத் தொடர்ந்து கூறி வருவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 11) பூஜ்ஜிய நேரத்தில் என்பிஆர், சிஏஏ விவகாரங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். என்பிஆர் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:

"என்பிஆர் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கூடாது, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதிகளில் மக்கள் தொடர்ந்து இடைவிடாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

என்பிஆர் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இன்றைக்கு நேரமில்லா நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி உடனடியாகத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்.

அப்போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சில விளக்கங்களைக் கூறினார். ஏற்கெனவே என்னென்ன தவறான விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாரோ அதே விளக்கங்களைத் தொடர்ந்து கூறினார். இந்தச் சட்டத்தால் எந்த மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பில்லை என்ற தவறான தகவலை பேரவையில் தொடர்ந்து சொல்கிறார். இந்தச் சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றதன என்பதை நான் அவையில் விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.

இந்தியாவின் 13 மாநில முதல்வர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர். பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார், இதனை எதிர்த்து அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். ஆந்திர முதல்வரின் ஒய்எஸ்ஆர் கட்சி நாடாளுமன்றத்தில் சிஏஏவை ஆதரித்தாலும், அம்மாநிலச் சட்டப்பேரவையில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவும் சட்டப்பேரவையில் எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் சிலவற்றைப் பேச முடியாது என, சில விளக்கங்களை அமைச்சர் கூறினார். கேரள அரசு தீர்மானம் இயற்றியதோடு மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. புதுவை, மேற்கு வங்கம் மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். தொடர்ந்து எல்லா மாநிலங்களும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

வண்ணாரப்பேட்டை, மண்ணடி போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கு அரசு செவிமடுக்கவில்லை. அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இந்தப் பிரச்சினைக்காக மட்டுமே வெளிநடப்பு செய்கிறோம். மறுபடியும் சட்டப்பேரவைக்குள் செல்வோம்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x