

சர்வதேச தாய்ப்பால் ஊட்டும் வாரத்தையொட்டி, பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, கடந்த 3-ம் தேதி தமிழகம் முழுவதும் 352 பஸ் நிலையங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள படம், தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதாகவும், சட்டத்துக்குப் புறம்பாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு இளம் குழந்தைகள் பராமரிப்பு சேவைக் கான கூட்டமைப்பின் அமைப்பாளர் முனைவர் கே.சண்முகவேலாயுதம் கூறியது: தாய்ப் பாலுக்கு இணையான உணவு என்று வேறு எதையும் விற்கவோ, விளம்பரப்படுத்தவோ இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும். புட்டிப் பால் தொடர்பாக விளம்பரம் செய்வதோ, பிரபலப்படுத்துவதோ சட்டப்படி குற்றம். இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வாய்ப்புள்ளது.
ஆனால், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையின் உள்ளேயும், வெளியேயும் குழந்தை புட்டிப் பால் குடிப்பதுபோன்ற படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்குப் புறம்பானவை. அதிகாரிகள் அலட்சியமாக செயல் படுகின்றனர் என்பதற்கு இதுவே சான்று. எனவே, புட்டிப் பால் வழங்குவதை ஊக்குவிக்கும் படங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
வரவேற்புக்குரிய இந்தத் திட்டத்தில் உள்ள சில குறைகளை நீக்கினால் சிறப்பாக இருக்கும்.
பாலூட்டும் அறையில் வருகைப் பதிவேடு வைப்பது அவசியம். இதன் மூலம் எத்தனை தாய்மார்கள் பாலூட்டும் அறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், திட்டத்தின் நோக்கம் பயன் தருகிறதா என்றும் அறிய முடியும்.
இரவிலும் இந்த அறைகளை பயன்படுத்தும் வசதி வேண்டும். பாதுகாப்புக்கு பெண் காவலரை பணியில் அமர்த்த வேண்டும். சென்னையில் உள்ளதுபோல தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய பதாகைகளை அறைக்குள் வைக்க வேண்டும்.
தாய்மார்கள் பாலூட்டும் அறை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும். இதன்மூலம், திட்டத்தின் பயன் மக்களை எளிதில் சென்றடையும் என்றார்.