200 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயிலில் திருடுபோன 3 உலோக சிலைகள் மீட்பு: தம்பதி உட்பட 4 பேர் கைது

போலீஸாரால் மீட்கப்பட்ட திருப்புறம்பியம் சீனிவாச பெருமாள் கோயில் சுவாமி சிலைகளை திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் (முகமூடி அணிந்திருப்பவர்கள்).
போலீஸாரால் மீட்கப்பட்ட திருப்புறம்பியம் சீனிவாச பெருமாள் கோயில் சுவாமி சிலைகளை திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் (முகமூடி அணிந்திருப்பவர்கள்).
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் திருடுபோன 3 உலோகச் சிலைகளை மீட்ட போலீஸார் இதுதொடர்பாக தம்பதி உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் தெற்கு வீதியில் ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்குச் சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.

கடந்த பிப்.10-ம் தேதி இரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், கோயில் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று அரை அடி உயரமுள்ள சீனிவாச பெருமாள், ஒன்றரை அடி உயரமுள்ள பத்மாவதி தாயார், முக்கால் அடி உயரமுள்ள விஷ்வக்‌சேனர் உலோகச் சிலைகள் மற்றும் வெள்ளியால் ஆன சடாரி, கவசம், தட்டு, கிரீடம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

மறுநாள் மாலை பராங்குசம் என்பவர் பூஜை செய்வதற்காக கோயிலை திறந்தபோது, பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு கோயில் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகி பாலாஜி, சுவாமிமலை போலீஸில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகியோரின் உத்தரவின்பேரில், கும்பகோணம் டி.எஸ்.பி. ஜெயசந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படையினர் சென்னை, காஞ்சிபுரம், தேனி, கம்பம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பழைய சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கிடைத்த ரகசிய தகவலின்படி கும்பகோணம் கணபதி நகரைச் சேர்ந்த ராமலிங்கம்(46) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமலிங்கம் திருப்புறம்பியம் கோயில் சிலை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதும், இவரது மனைவி ராசாத்தி (36), மகன் கமல்ராஜ் (18) மற்றும் தஞ்சாவூர் பொட்டுவாச்சாவடியைச் சேர்ந்த மெல்வின் சகாயராஜ் (40) என்பவருடன் சேர்ந்துகொண்டு 4 பேரும் சிலை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று அதிகாலை ராமலிங்கத்தின் வீட்டில் பதுங்கி இருந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த மூன்று சிலைகள், வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, 4 பேரையும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in