Published : 24 Aug 2015 08:18 AM
Last Updated : 24 Aug 2015 08:18 AM

மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: மதுவிலக்கு, குடிநீர் பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 29-ம் தேதி வரை பேரவை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் தொடங்கி 4 நாட்கள் நடந்தது. அதைத் தொடர்ந்து, மார்ச் 25-ம் தேதி 2015-16ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் அப்போதைய முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன்மீது விவாதம் நடந்து, ஏப்ரல் 1-ல் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெய லலிதா, மே 23-ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இதை யடுத்து, துறை ரீதியான மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக சட்டப்பேரவை உடனடியாக கூடும் என எதிர்பார்க் கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சட்டப் பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை ஆகஸ்ட் 24-ம் தேதி கூடும் என பேரவைச் செயலாளர் அறிவித்தார். பின்னர், பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கடந்த 21-ம் தேதி நடந்தது. அதில் செப்டம்பர் 29-ம் தேதி வரை பேரவைக் கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடு கிறது. முதலில், பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறை வுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப் படுகிறது. அதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், சமீபத்தில் இறந்த முன் னாள் அமைச்சரும், கடைய நல்லூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவுமான செந்தூர் பாண்டியன் மற்றும் இசையமைப் பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய மூவருக்கும் இரங்கல் தெரி வித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்படுகின்றன. அத்துடன் சபை அலுவல்கள் ஒத்தி வைக்கப் படுகிறது.

நாளை காலை மீண்டும் பேரவை கூடுகிறது. அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, வேளாண் துறை ஆகிய இரு துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தினமும் முதலில் கேள்வி நேரமும் அதைத் தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக் கைகள் மீது விவாதமும் நடக் கிறது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பில் உள்ள உள்துறை மானியக் கோரிக்கை செப்டம்பர் 22-ம் விவாதத்துக்கு வருகிறது.

19 நாட்கள் நடக்கிறது

ஆகஸ்ட் 28 (ஓணம் பண்டிகை), செப்டம்பர் 17 (விநாயகர் சதுர்த்தி), 24 (பக்ரீத்) என அரசு விடு முறை தினங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பேரவைக் கூட்டம் இல்லை. இது தவிர, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9,10 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. இதையொட்டி, செப்டம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் தவிர்த்து மொத்தம் 19 நாட்கள் பேரவைக் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத் தொடரின்போது மதுவிலக்கு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட சில பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்க ஆளும்கட்சி தரப்பிலும் தயாராகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x