

கோவிட்-19 பாதிப்பை தடுக்கும் வகையில் பேருந்துகளை சுத்தமாகவைத்திருக்க வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமியின் உத்தரவை தொடர்ந்து, சென்னை மாநகர பேருந்துகளில் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கோவிட்-19 பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செய லகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல்வரின் உத்தரவுப்படி
இக்கூட்டத்தில், கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும்பொருட்டு, சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றும்படி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அத்துடன் அதிக அளவுபயணிகள் செல்லும் பேருந்து களை நாள்தோறும் முறையாக பராமரித்து சுத்தம் செய்யும்படியும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பேருந்துகளை முறையாக சுத்தப்படுத்தும்படி அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினசரி 3,400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிக்கும் 30 லட்சம் பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையிலும், கோவிட்-19 பரவாமல் தடுக்கவும் சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில், மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகள் அந்தந்த பணிமனைகளில் நேற்று முன்தினம் (மார்ச் 9) இரவு முதல் கிருமிநாசினிகள் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றன. பேருந்துகளை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில்களில்...
இதேபோல் ரயில் பெட்டிகளும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.