மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது
Updated on
1 min read

சட்டப்பேரவையில் இன்றுமுதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்தபிப்.14-ல் தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. பின்னர்தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9-ம் தேதி மீண்டும் தொடங்கியது.

முதல் நாளில் முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன், திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி,காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பேரவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

முதல் நாளான இன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதுவிவாதம் நடக்கிறது. விவாதத்துக்கு பதிலளித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பதிலளிக்கின்றனர்.

தற்போது கோவிட்-19 வைரஸ்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கோவிட்-19 குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக விவாதிக்க திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பக் கூடும் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in