

கேரளாவில் பரவியுள்ள பறவைக்காய்ச்சல் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் - கேரள மாநில எல்லைகளில் 26 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரகண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள 26 சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் தமிழக எல்லைக்குள் நுழையா வண்ணம் தடை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.
தமிழகத்தில் நுழையும் இதர வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்குள் நோய் பரவாத வண்ணம் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கொண்ட மொத்தம் 1,061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக் களுக்குத் தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன.
மேலும் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய நோய் கட்டுப்பாட்டு அறை கோயம்புத்தூர், கால்நடை பன்முக மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையை 0422-2397614 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.