கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மகப்பேறு, திருமண உதவி தொகைகளை அதிகரிக்க அரசுக்கு பரிந்துரை: அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்

கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மகப்பேறு, திருமண உதவி தொகைகளை அதிகரிக்க அரசுக்கு பரிந்துரை: அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்
Updated on
1 min read

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தை களுக்கான கல்வி, மகப்பேறு மற்றும்திருமண உதவித் தொகைகளை உயர்த்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைச்சர் தலைமையில் நடந்த வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் கூட்டம்அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில் நடந்தது. இதில் தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர் சு.பொன்னுசாமி, உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர் ஆ.திவ்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் தலைமையில் நடந்த நலவாரியக் கூட்டத்தில் மத்திய அரசின் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான மாதிரி நலத்திட்டம் அடிப்படையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைகளை உயர்த்தி வழங்குவது தொடர்பாக விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது.

பிற மாநில வாரியங்களில் வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகைகளுக்கு நிகராக மகப்பேறு உதவித் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்குவது, திருமண உதவித் தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்குவது குறித்தும் அரசுக்கு பரிந்துரைக்க வாரியத்தின் ஒப்பதல் பெறப்பட்டது.

2011-ம் ஆண்டு மே 16-ம் தேதி முதல் கடந்த பிப்.29-ம் தேதி வரை 10 லட்சத்து 17 ஆயிரத்து 908 கட்டுமானத் தொழிலாளர்கள் புதிதாக பதியப்பட்டு, 14 லட்சத்து 19 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.608 கோடியே 47 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 16 நலவாரியங்களில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம் தவிர பிறவாரியங்களில் இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு தேவையான நிதியை வழங்கி வருகிறது. இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த ரூ.725 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 753 மானியமாக தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் கடந்த 2011 முதல் தற்போது வரை 13 லட்சத்து 49 ஆயிரத்து 425 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த வாரியங்களில் பதிவு செய்துள்ள 23 லட்சத்து 97 ஆயிரத்து 422 தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.725 கோடியே 5 லட்சத்து 34 ஆயிரத்து 753 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in