

பாஜகவில் ஒருபோதும் இணைய மாட்டேன் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து தமாகா வளர்ந்து வருகிறது. தேர்தல் வெற்றி - தோல்விகளைத் தாண்டி காமராஜர்,மூப்பனார் போன்ற தலைவர் களோடு பணியாற்றியவர்கள் தமாகா வளர்ச்சிக்காக உழைத்து வருகிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டோம். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடைசியில்தான் தமாகா இணைந்தது. இதனால்தமாகா கேட்கும் இடங்களை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டிய கட்டாய நிலையில் இருந்தோம்.
தமாகாவின் பலத்தை மதித்துகூட்டணிக்கு அதிமுக அழைப்புவிடுத்ததால் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் தொகுதி பெரிதல்ல, எண்ணம்தான் பெரிது என்றஅடிப்படையில் ஏற்றுக் கொண்டோம். அதன்பிறகு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மக்கள் பிரச்சினைக்காக பல முறை சந்தித்தோம்.
அப்போது தமாகாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். அதனை ஏற்றும், கூட்டணிதர்மத்தை மதித்தும் தமாகாவுக்கு அதிமுக அங்கீகாரம் அளித்துள்ளது. அதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகாவின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத சில கட்சிகள் தமாகாவை பாஜகவில் இணைக்கப் போவதாகவும், நான் பாஜக மாநிலத் தலைவராகப் போவதாகவும் வதந்தி பரப்பி வருகிறார்கள். இது வடிகட்டிய பொய். நான் ஒருபோதும் பாஜகவில் இணைய மாட்டேன்.
இதுபோன்ற வதந்திகள் மூலம் தமாகாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது. 2 முறை எம்.பி.,மத்திய அமைச்சராக செயல்பட்டதால் டெல்லி அரசியலை நன்கறிந்துள்ளேன். எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் செயல்படுவேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.