

மாநிலங்களவையில் அதிமுக சார்பில் போட்டியிட ஜி.கே.வாசனுக்கு சீட் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சாணக்கியத்தனம் உண்டு என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை சொக்கலிங்க நகர் பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்பில் புதிதாக 7 சாலைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2021-ல் விஜயகாந்த் முதல்வராவார் என பிரேமலதா பேசியது அவரது கருத்து. தோழமைக் கட்சிகளுக்கு ஒவ்வொரு கொள்கை உண்டு, அவரவர் விருப்பத்தைக்கூற அவர்களுக்கு உரிமை உள்ளது. தங்கள் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த அவ்வாறு தலைவர்கள் பேசுகிறார்கள். அதை கூட்டணிக்கு எதிரானதாக கருதக் கூடாது
ஒரு அரசியல் கட்சியைத் தலைமை ஏற்று நடத்தும் முதல்வரும், துணை முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்களை அறிவிக்கிறார்கள். ஜி.கே. வாசனுக்கு ஒரு சீட் அதிமுக சார்பில் ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் அரசியல் சாணக்கியத்தனம் உண்டு. திருநாவுக்கரசர் மீது ரஜினிக்கு அபிமானம் உண்டு. அவரைச் சந்திப்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றார்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காதது ஏன் எனக் கேட்டபோது அது குறித்து கருத்துக் கூற முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார்.