கடம்பூர் - வாஞ்சி மணியாச்சி இடையே இரண்டாவது ரயில் தண்டவாள பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு: நாளை வெள்ளோட்டம் நடக்கிறது

கடம்பூர் - வாஞ்சி மணியாச்சி இடையே இரண்டாவது ரயில் தண்டவாள பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு: நாளை வெள்ளோட்டம் நடக்கிறது
Updated on
1 min read

கடம்பூரில் இருந்து வாஞ்சி மணியாச்சி வரையிலான இரண்டாவது ரயில் தண்டவாள பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை - தூத்துக்குடி வரையிலான 160 கி.மீ. தூரத்துக்கு இரண்டாவது ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் கீழ் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பணிகளில் தற்போது கடம்பூரில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக தட்டப்பாறை வரையிலான 35 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதில் இன்று முதற்கட்டமாக கடம்பூர் முதல் வாஞ்சி மணியாச்சி வரையிலான சுமார் 11 கி.மீ. தூர இரண்டாவது ரயில்வே தண்டவாள பணிகளை தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், ரயில்வே கட்டுமான நிர்வாக தலைமை அதிகாரி சின்ஹா மற்றும் அதிகாரிகள் 7 டிராலிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

டக்கரம்மாள்புரம் ரயில்வே கேட்டில் நடந்த ஆய்வுப் பணி தொடக்க நிகழ்ச்சியில், பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன், ரயில்வே கேட் சரியாக செயல்படுகிறதா, கேட் கீப்பர் அறைக்கும் தண்டவாளத்துக்குமான இடைவெளி, ரயில் தண்டவாளங்கள் சந்திக்கும் பணிகளில் உள்ள இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், அதிகாரிகள் டிராலியில் வாஞ்சி மணியாச்சி புறப்பட்டு சென்றனர்.

இந்தப் பணிகளில் இன்று (11-ம் தேதி) வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். மாலை 3 மணியளவில் தட்டப்பாறையில் இருந்து கடம்பூர் வரை 90 முதல் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் ரயில்கள் இயக்குவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் முடிவெடுக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கடம்பூர் ரயில் நிலைய புதிய கட்டடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் திறந்து வைத்து, நடைமேடை, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in