Published : 10 Mar 2020 09:05 PM
Last Updated : 10 Mar 2020 09:05 PM

சிவகங்கை தொகுதியில் பணப் பட்டுவாடா செய்யவில்லை: ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் மறுப்பு

2009 மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உயர் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன் விசாரணையில் உள்ளது. ஏற்கெனவே கடந்த 4-ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த சிதம்பரம், இன்று இரண்டாவது நாளாக சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார்.

அவரிடம் குறுக்கு விசாரணை செய்த ராஜ கண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர் ராஜசேகரன், ''2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் எழுதிய புத்தகத்தில் அரசியல் ஒரு வியாபாரம் என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வது முதலீடு என நினைக்கிறீர்களா? வாக்கு எண்ணிக்கையில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் ஏற்பட்டதா?'' என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறிய குற்றச்சாட்டுகளை ப.சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார். அவரிடம் 2 மணிநேரத்திற்கும் மேல் குறுக்கு விசாரணை நடந்தது. இதையடுத்து, சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராஜகோபாலிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை இந்த மாதம் 30-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x