Last Updated : 10 Mar, 2020 06:49 PM

 

Published : 10 Mar 2020 06:49 PM
Last Updated : 10 Mar 2020 06:49 PM

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவைகளில் தீர்மானம்; அரசியலமைப்புக்கு விரோதம்: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேஹ்வால் கருத்து

புதுச்சேரி

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்ததுக்கு எதிராக சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேஹ்வால் தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு இன்று நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரகத் தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் வந்திருந்தார். அவர் அரவிந்தர் ஆசிரமம் சென்றார். அதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரின் சந்திப்பு நடந்தது. பின்னர் பாஜக அலுவலகத்துக்குச் சென்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேஹ்வால் பேசியதாவது:

''சமூகப் பொறுப்புணர்வு திட்ட நிதிக்கான பணிகள் புதுச்சேரியில் நிலுவையில் உள்ளன. நீர்நிலைகள் தூய்மைப் பணி, சுமார் 21 கி.மீ. தொலைவுக்கான ரயில்வே திட்டப் பணிகள் நிலுவையில் உள்ளன. விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் தொடர்பாகவும், பெல் சென்னை கிளை மேம்பாட்டு திட்டப் பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் இளையோர் வேலைவாய்ப்புக்காகக் காத்துள்ளனர். அதற்காகவும் இச்சந்திப்பு இருந்தது.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் மத்தியப் பட்டியலில் வருகிறது. கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது.

மத்திய அரசானது அனைத்து மக்களையும் சமமாகப் பாவித்தே நாட்டை முன்னேற்றவே திட்டங்களைச் செயல்படுத்துகிறது. குற்றம் சாட்டி கட்சிகள் போராடுவது அரசியலுக்குதான்.

டெல்லி சம்பவம் தொடர்பாக நாளை மக்களவையிலும், வரும் 12-ல் மாநிலங்களவையிலும் ஆலோசிக்கப்படும்.

புதுச்சேரியில் நிலுவையிலுள்ள ரயில் இணைப்பு திட்டம், விமான நிலைய விரிவாக்கப் பணி , ஓன்ஜிசி- சமூகப் பொறுப்புணர்வு திட்ட நிதி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்க உள்ளேன்''.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேஹ்வால் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்துள்ளார். இச்சட்டத்தை எந்த மாநிலமும், யூனியன் பிரதேசமும் மறுக்க முடியாது. பின்பற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசியல் அமைப்புக்கு விரோதமானது.

அதேபோல்தான் மக்கள்தொகை பதிவேடும். இது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்ததுதான். அனைத்து நாடுகளிலும் மக்கள்தொகை பதிவேடு உள்ளது. மக்கள்தொகை பதிவேடு கடந்த கால காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. குடியுரிமைச் சட்டத் திருத்தம், மக்கள்தொகை பதிவேடு குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை" என்று அர்ஜூன் ராம் மேஹ்வால் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x