

மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அவரது உருவப்படம் திறக்கப்பட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
43 ஆண்டுகள் திமுக பொதுச்செயலாளராக இருந்தவர் அன்பழகன். இனமானப் பேராசிரியர் என திமுகவினரால் அழைக்கப்பட்ட அன்பழகன் தனது 98-வது வயதில் உடல் நலக்குறைவால் கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு தேசியத் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ராபின்சன் பூங்காவில் திமுகவை ஆரம்பித்த தலைவர்களில் கடைசியாக உயிருடன் இருந்த தலைவர் என்கிற பெருமைக்கு உரியவர் அன்பழகன். மூத்த தலைவரான அன்பழகனைக் கவுரவிக்கும் விதமாக அவரது உருவப்படத்தை திறந்து வைத்து நினைவு நிகழ்ச்சி நடத்த உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக சார்பில் இன்று வெளியான அறிவிப்பு:
“திமுக பொதுச் செயலாளர், இனமானப் பேராசிரியர் படத்திறப்பு நிகழ்ச்சி வரும் மார்ச் 14 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில், திமுக தலைவர் ஸ்டாலின் உருவப்படத்தை திறந்து வைப்பார். திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றுகிறார்கள்”.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.