Published : 10 Mar 2020 02:20 PM
Last Updated : 10 Mar 2020 02:20 PM

'மகாநதி' ஷோபனா பாடிய 'கந்த சஷ்டி கவசம்': பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

'மகாநதி' ஷோபனா: கோப்புப்படம்

சென்னை

'மகாநதி' ஷோபனா பாடிய 'கந்த சஷ்டி கவசம்' பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

'மகாநதி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷோபனா. கர்நாடக இசைக் கலைஞரான இவர், கடந்த 1995 ஆம் ஆண்டு 'சிம்பொனி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 'கந்த சஷ்டி கவசம்' மற்றும் 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்' ஆகிய இரண்டு ஆல்பங்களைப் பாடியுள்ளார்.

இந்த இரண்டு ஆல்பங்களும் 'சிம்பொனி' மற்றும் 'பக்தி எஃப்.எம்' என்ற பெயரில் யூ டியூப்பில் வெளியிடப்பட்டு தற்போது 47 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபனா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று (மார்ச் 10) விசாரணைக்கு வந்தபோது, 13 வயதில் மைனராக இருந்தபோது ஷோபனாவிடம் சிம்பொனி நிறுவனம் போட்ட ஒப்பந்தம் சட்ட ரீதியாகச் செல்லாது என ஷோபனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஹர அருண் வாதிட்டார்.

மேலும், தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்த புகைப்படங்களை அனுமதி இல்லாமல் எடுத்து பாடல்களுக்குப் பயன்படுத்தியது சட்டவிரோதமானது என்பதால், இந்த இரண்டு ஆல்பங்களையும் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.

இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 'மகாநதி' ஷோபனா பாடிய 'கந்த சஷ்டி கவசம்' மற்றும் 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்' ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x