

கூட்டணிக்காக நாங்கள் கொள்கைகளை சமரசம் செய்துகொள்ளவில்லை என, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று (மார்ச் 9) பாமக நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஜி.கே.மணி கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது அதிர்ச்சியளிப்பதாகவும், ரயில்வே, எல்ஐசி போறவற்றை தனியார்மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது ஒரு வரலாற்று நிகழ்வு என, ஜி.கே.மணி பாராட்டு தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி என்பதால் கூட்டணி தர்மத்திற்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும், தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும், ஜி.கே.மணி தெரிவித்தார்.
"மது ஒழிப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 3,361 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம். மாற்றுக்கருத்தே இல்லை. நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களிலும் அதற்கு பிறகான தேர்தல்களிலும் தொடரும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டணிக்காக நாங்கள் கொள்கைகளை சமரசம் செய்துகொள்ளவில்லை" என ஜி.கே.மணி தெரிவித்தார்.