

பிளஸ் 1 தேர்வுகள் கடந்த 4-ம் தேதி தொடங்கின. விருதுநகர் மாவட்டத்தில் 23,563 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
பிளஸ் 2 தேர்வில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 23,214 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 2-ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வில் 535 மாணவர்கள், 472 மாணவிகள் என மொத்தம் 1007 பேர் தேர்வு எழுதவில்லை. இதேபோன்று, கடந்த 4-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 தேர்வில் மொத்தம் 969 பேர் தேர்வெழுதவில்லை. 6-ம் தேதி நடைபெற்ற ஆங்கில பாடத் தேர்வை ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதவில்லை.
மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் சுபாஷினியிடம் கேட்ட போது, பிளஸ் 1 வருகைப் பதிவே பிளஸ் 2-க்கும் பின்பற்றப்படுகிறது. சில மாணவர்கள் பிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். ஆனால், அவர்களுத்து பெயர் பதிவு மட்டும் அப்படியே பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால்தான் ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை தேர்வில் குறைகிறது என்றார்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் பலர் தொடர்ந்து மேல்படிப்பைத் தொடர்வதில்லை. அதேபோன்று, பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், பிளஸ் 2 வகுப்பில் சரியாகப் படிக்காத மாணவர்கள் சிலரும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. குடும்பச் சூழ்நிலை, வறுமை காரணமாக மாணவர்கள் பலர் வேலைக்கு அனுப்பி வைக்கப் படுகிறார்கள்.
குழந்தைத் திருமணம் போன்ற காரணங்களால், பெண்களும் படிப்பைத் தொடராமல் விட்டு விடுகின்றனர். இதைக் கண் காணித்து இடை நிற்கும் மாணவ, மாணவியரைக் கண்டறிந்து அவர்கள் தொடர்ந்து படிப்பதை கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.