

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தனது பெண் நண்பரை திருமணம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் பெண்கள் பொன்மாரி (25), ஸ்வீட்லி(22). இருவரும் ஒன்றாக வேலை செய்தபோது பழகினர். இந்நிலையில் பொன்மாரி ஆணாக மாறி (திருநம்பி) ஸ்வீட்லியின் விருப்பத்துடன் அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இது ஸ்வீட்லியின் பெற்றோருக்குத் தெரியவே எதிர்ப்புத் தெரிவித்தனர். 10 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மதுரை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் தஞ்சம் அடைந்தனர்.
நேற்று பொன்மாரி, ஸ்வீட்லி இருவரும் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாரதி கண்ணம்மா அறக்கட்டளைத் தலைவர் பாரதி கண்ணம்மாவுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து வந்து ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகுமாறு ஆட்சியர் வினய் அவர்களை அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து ஸ்வீட்லி கூறும்போது, நானும், பொன்மாரியும் செவிலியர் படிப்பு படித்து, தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்றி வந்தோம்.
கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து வாழ முடிவு செய்தோம். இதையறிந்த எனது பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதனால் மதுரை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் தஞ்சமடைந்தோம். திருமணம் செய்து வாழ எங்களை அனுமதிக்க வேண்டும், என்றார்.