Published : 10 Mar 2020 10:00 AM
Last Updated : 10 Mar 2020 10:00 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீ விபத்து: பிரசாத கடை எரிந்து சேதம்

கோப்புப்படம்

திருச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரசாத ஸ்டால் பற்றி எரிந்து சேதமடைந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு லட்டு, புளியோதரை, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்களை விற்பனை செய்வதற்காக ஆரியபடாள் வாசல் அருகே தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பிரசாத ஸ்டால் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு கோயிலில் நடை சாற்றப்பட்ட பின்னர், 11.30 மணியளவில் பிரசாத ஸ்டால் மூடப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரசாத ஸ்டால் திடீரென தீப்பற்றி எரிந்தது.

உள்ளே நெய் வைக்கப்பட்டிருந்ததால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அதிலிருந்து வெளியேறிய கரும்புகை மண்டபத்தின் பெரும்பகுதியைச் சூழ்ந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் பணியாளர்கள் உடனடியாக அங்குள்ள தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், அதற்குள்ளாக பிரசாத ஸ்டால் முழுமையாக எரிந்துவிட்டது.

அதன்பின்னர் அந்த இடத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. தீ விபத்தால் ஏற்பட்ட குப்பை அகற்றப்பட்ட நிலையில், கரும் புகை படிந்த மண்டபத்தின் மேல்பகுதி, கல் தூண்கள், தரைப் பகுதிகளை தண்ணீரைக் கொண்டு கழுவி தூய்மைப்படுத்தும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் ரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த தீ விபத்து காரணமாக கோயிலில் பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்படவில்லை. அதிகாலை விஸ்வரூப தரிசனம் உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளும் வழக்கம்போல நடந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x