

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்துத் தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து, பலரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சி நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளர் விமல்குமார், குரூப்-4 தேர்வில் லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருவேல்முருகன், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நிதிஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி செல்வகுமார் முன் நேற்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தபோது, விமல்குமார், 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்றதாகவும், திருவேல்முருகன் 7 லட்சம் ரூபாயும், நிதிஷ்குமார் 6 லட்சம் ரூபாயும் லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாகவும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கும் எனவும் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கவுரி அசோகன் வாதிட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.