டார்னியர் விமான விபத்து: 3 விமானிகளும் உயிரிழந்தது டிஎன்ஏ சோதனையில் உறுதியானது - கடலோர காவல் படை ஐ.ஜி. சர்மா தகவல்

டார்னியர் விமான விபத்து: 3 விமானிகளும் உயிரிழந்தது டிஎன்ஏ சோதனையில் உறுதியானது - கடலோர காவல் படை ஐ.ஜி. சர்மா தகவல்
Updated on
1 min read

விபத்துக்குள்ளான டார்னியர் ரக விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளைக் கொண்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனை மூலம், அதில் பயணம் செய்த 3 விமானிகளும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமானப்படை தளத்தில் இருந்து கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற டார்னியர் சிறிய ரக விமானம், கடந்த ஜூன் 8-ம் தேதி ரோந்துப் பணிக்கு சென்றபோது, பிச்சாவரம் கடல் பகுதியில் காணாமல் போனது.

அந்த விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேர் இருந்தனர். விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல் படை மற்றும் கடற்படையின் அதிநவீன கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன், ‘பி-8ஐ’ என்ற போர் விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.வி. ஒலிம்பிக் கேன்யான், அதிநவீன சாகர் நிதி கப்பல்கள் மூலமும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 34 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காணாமல் போன விமானத்தின் கருப்புப் பெட்டி, கடந்த ஜூலை 11-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அவை டிஎன்ஏ சோதனைக்காக தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், விமானிகளின் பெற்றோரிடம் இருந்து ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது.

டிஎன்ஏ சோதனையில், கண்டெடுக்கப்பட்ட எலும்புகள், விமானிகளுடையதுதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி மீனம்பாக்கத்தில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெறும். இத்தகவலை, கடலோர காவல்படை ஐ.ஜி. சர்மா நேற்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in