

வாணியம்பாடி பாலாற்றில் இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற 12 வயது சிறுமியை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெற்றோரை இழந்து பாதுகாவலர் கண்காணிப்பில் 12 வயதுடைய சிறுமி வசித்து வந்தார்.
இவர், அதேபகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி தங்கியிருந்த வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், அருகேயுள்ள பாலாற்றில் இயற்கை உபாதை கழிக்க கடந்த 6-ம் தேதி இரவு 7 மணிக்கு சிறுமி தனியாக சென்றார்.
அப்போது, சிறுமியை பின் தொடர்ந்து சென்ற 3 பேர், சிறுமியை பாலாற்றுப் பகுதிக்கு கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி, வீட்டுக்கு வந்து பாதுகாவலரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார்.
போலீஸில் புகார்
இதுகுறித்து பாதுகாவலர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன் பேரில், காவல்துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (30), பார்த்தீபன் (22), சந்துரு (24) ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட 3 பேரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனர்.